CRIME
“ரூ. 5 லட்சம் கொடுத்தாதான் விடுவிப்போம்..!” காதலியை பார்க்க வந்த காதலனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காதலியைக் காணச் சென்ற இளைஞர் ஒருவரை பெண்ணின் குடும்பத்தினர் தூணில் தலைகீழாகக் கட்டி வைத்து, கயிறுகளால் பிணைத்துக் கொடூரமாகத் தாக்கிய மனிதநேயமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 9 அன்று நடந்த இந்த விபரீத சம்பவத்தில், அந்த இளைஞரைச் சித்திரவதை செய்தது மட்டுமின்றி, அவரை விடுவிக்க ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டும் எனப் பெண்ணின் குடும்பத்தினர் மிரட்டிப் பணம் கேட்டுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, இந்த விவகாரம் பொதுமக்களின் கவனத்திற்கு வந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்களில் வீடியோ பரவி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மிர்சாபூர் எல்லைக்குட்பட்ட போலீசார் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர். இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கடத்தல், கொலை மிரட்டல் மற்றும் சட்டவிரோதமாகச் சிறைபிடித்துச் சித்திரவதை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பெண்ணின் குடும்பத்தாரையும், இக்கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கைத் கையில் எடுத்துக்கொண்டு இளைஞரை மிருகத்தனமாகத் தாக்கிய இந்தச் சம்பவம் உபி-யில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
