CRIME
“கொன்னுடுவேன்…!” துப்பாக்கி முனையில் தந்தை, அண்ணி… 25 நிமிடத்தில் தோழியுடன் வந்து ரத்தக் களறியாக்க முயன்ற பெண்… பதற வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கார் லோன் தொடர்பாக குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராறு எதிர்பாராத வகையில் தீவிரமடைந்துள்ளது. தன்னுடைய கார் கடனுக்கான சரிபார்ப்பு நடவடிக்கைக்கு தந்தை உதவ மறுத்ததால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் இளம்பெண், வீட்டுக்குச் சென்று தந்தை மற்றும் சகோதரர் மனைவியை துப்பாக்கியால் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. சாஹிபாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விரிந்தாவன் கார்டன் பகுதியில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பகுதியில் வசிக்கும் ஹிதேஷ் தோமர் என்பவரின் மகள் பிரியங்கா தோமர், கார் வாங்குவதற்காகக் கடன் பெற விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான சரிபார்ப்பு நடவடிக்கையில் தந்தை பங்கேற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரியங்காவும் அவரது தோழியும் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்ட போது, அதைத் தடுக்க முயன்ற சகோதரரின் மனைவியுடனும் வாக்குவாதம் உருவாகியுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்ற பிரியங்கா, சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தோழியுடன் வந்து, துப்பாக்கியை எடுத்து தந்தை மற்றும் சகோதரர் மனைவியை சுட்டுவிடுவதாக மிரட்டியதாகக் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஹிதேஷ் தோமர் அளித்த புகாரின் பேரில் பிரியங்கா மற்றும் அவரது தோழி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உண்மையானதா, அது யாருடையது மற்றும் அதற்கு உரிய உரிமம் உள்ளதா என்பது குறித்தும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சாதாரண நிதி சார்ந்த கருத்து வேறுபாடு குடும்பத்தினரிடையே துப்பாக்கி முனையில் மிரட்டும் அளவுக்குச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
