CRIME
“என் புருஷன் செத்துட்டாரு…” உயிருடன் இருக்கும் கணவனுக்கு போலி இறப்புச் சான்றிதழ்… 56 லட்ச பிளாட்டை ரூ.1.11 கோடிக்கு விற்று பெண் செய்த பகீர் மோசடி..!!
மும்பையின் போரிவலி பகுதியில் கூட்டு உரிமையில் இருந்த பிளாட்டை விற்பனை செய்வதற்காக, தனது கணவர் இறந்துவிட்டதாகக் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த 49 வயதான ஷாலினி டயானா கிராஸ்டா என்பவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஷாலினி டயானா கிராஸ்டா மற்றும் ரைன் கிராஸ்டா ஆகிய இருவருக்கும் 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன்பின்னர் 2016-ஆம் ஆண்டில், போரிவலி எல்.எம் பாதையிலுள்ள ராஜ் வில்லா கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ஒரு படுக்கையறை கொண்ட பிளாட் ஒன்றை இருவரும் இணைந்து வாங்கினர். இதன் வாங்குவதற்காக சுமார் ரூ.56 லட்சம் கடன் பெறப்பட்டு, இருவரின் பெயரிலும் சொத்து பதிவு செய்யப்பட்டது.
காலப்போக்கில் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினர். இருப்பினும், அந்த வீடு இருவரின் கூட்டு உரிமையிலேயே தொடர்ந்தது. கணவர் ரைன் தொடர்ந்து அதற்கான கடன் தவணைகளை செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் ரைன் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகக் கூறி போலி இறப்புச் சான்றிதழை ஷாலினி தயார் செய்துள்ளார். மேலும், வீட்டுவசதி சங்கத்திடமிருந்து போலி ஆட்சேபனை இல்லா சான்றிதழ் மற்றும் ரைனின் ஒரே வாரிசு தாந்தான் எனக் கூறி போலி வாக்குமூலப் பத்திரத்தையும் உருவாக்கியுள்ளார். இந்த போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஏப்ரல் 11 அன்று தர்மேஷ் ஜெகதீஷ் டன்னா மற்றும் தாரா தர்மேஷ் டன்னா ஆகியோருக்கு அந்த பிளாட்டை ஷாலினி விற்பனை செய்தார். வீட்டை வாங்கிய புதிய நபர்கள், அந்தச் சொத்தை அடமானம் வைத்து வங்கியில் சுமார் ரூ.1.11 கோடி கடனாகப் பெற்றுள்ளனர்.
2026 மே மாதத்தில் ரைனின் நண்பரான பிரசாத் படாடே, ரைனின் பிளாட் வேறு ஒருவர் பெயரில் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக ரைனிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரைன் மற்றும் அவரது தாயார் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி விசாரணை நடத்தியபோது முழு மோசடியும் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டுவசதி சங்க அதிகாரிகளிடம் NOC சான்றிதழைக் காட்டியபோது, அது தங்களால் வழங்கப்படவில்லை என்றும் அதில் உள்ள கையெழுத்துகள் போலியானவை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரைன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 9 அன்று ஷாலினியைக் கைது செய்தனர். பின்னர் அவர் போரிவலி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் அடைக்கப்பட்டார். போலி இறப்புச் சான்றிதழ் மற்றும் NOC தயார் செய்ய ஷாலினிக்கு உதவியவர்கள் யார், மேலும் இந்த விற்பனை மூலம் கிடைத்த ரூ.1.11 கோடி பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
