CRIME
“அட கொடுமையே.. தாலி கட்டும் சில நிமிடங்கள் முன் மணப்பெண் செய்த காரியம்..” மண்டபத்தை விட்டு ஓடிய பெற்றோர்.. பரபரப்பு பின்னணி..!!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தாலி கட்டும் முகூர்த்த நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூரைச் சேர்ந்த ஒருவருக்கும், ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பெற்றோரால் திருமண நிச்சயம் செய்யப்பட்டு, வரவேற்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடந்து முடிந்தது. மறுநாள் அதிகாலையில் முகூர்த்தத்திற்காகப் பெற்றோர் மணப்பெண்ணை எழுப்பியபோது, அவர் மேக்கப் போட மறுத்து, தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று பிடிவாதமாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் காலை 5:30 மணியளவில் அவசர போலீஸ் எண் 100-க்கு அவரே போன் செய்து, தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதாகப் புகார் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் மற்றும் பொன்னேரி அனைத்து மகளிர் போலீசார் மணப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் தொடர்ந்து திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்ததால், கோபமடைந்த பெற்றோர் அவரை மண்டபத்திலேயே தவிக்கவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் தனியாக இருந்த மணப்பெண்ணை மீட்ட போலீசார், அலமாதி கிராமத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்தத் திடீர் திருப்பத்தால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலையில், மணப்பெண் வேறு யாரையாவது காதலிக்கிறாரா அல்லது குடும்பப் பிரச்சினை காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
