CRIME
மாதம் ரூ.25,000 சம்பளம்… ஆனா கடைசியில் திருடன் ஆன ஐடி இன்ஜினியர்… போலீசிடம் சொன்ன பகீர் காரணம்..!!
சென்னை இந்திராநகர் 17-வது குறுக்குத்தெருவில் மங்கள்சந்த் என்பவருக்குச் சொந்தமான நகை அடகு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி, மர்ம நபர் ஒருவர் இந்த அடகு கடையின் பூட்டை உடைக்க முயன்றுள்ளார். இதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக உரிமையாளருக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து, பொதுமக்கள் உதவியுடன் அந்த நபர் தப்பியோட முயன்றபோது மடக்கிப் பிடிக்கப்பட்டு திருவான்மியூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25) என்பது தெரியவந்தது. மேலும், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருவதும், அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதும் விசாரணையில் வெளிவந்தது.
நன்கு படித்த ஒரு மென்பொருள் பொறியாளர் ஏன் திருட்டு முயற்சியில் ஈடுபட்டார் என்று போலீசார் கேட்டபோது, அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு கம்ப்யூட்டர் நிறுவன வேலையில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பதாகவும், ஆனால் ஆன்லைன் முதலீட்டில் ஈடுபட்டு பெரும் தொகையை நஷ்டமடைந்ததால் கடுமையான கடனில் சிக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அந்தக் கடனை அடைப்பதற்காகவே முதல்முறையாக திருடத் துணிந்ததாகவும், போதிய அனுபவம் இல்லாததால் மாட்டிக்கொண்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
