LATEST NEWS
நோ நோய்கள்.. நோ சோர்வு…! நீண்ட ஆயுளில் ஜப்பான் தான் எப்போதும் நம்பர் 1..! அவங்களோட இந்த ஒரு சீக்ரெட் பழக்கம் தெரிஞ்சா நீங்களும் 100 வயசு வரை வாழலாம்..!!
ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் நிலவரப்படி 99,763 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதுடன், இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழும் ஜப்பானியர்களின் இந்த ஆரோக்கியத்திற்கு, அவர்களின் கட்டுப்பாடான வாழ்க்கை முறை, தொன்று தொட்டு பின்பற்றும் உணவு முறைகள், உடல் இயக்கம், வலுவான சமூக உறவுகள் மற்றும் வளர்ச்சியடைந்த மருத்துவக் கட்டமைப்பு ஆகியவையே முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
அவர்களின் நீண்ட ஆயுளுக்கான முதன்மை ரகசியம் ‘அளவான உணவு’ மற்றும் ‘சத்தான உணவுப் பழக்கம்’ ஆகும். வயிறு 80 விழுக்காடு நிறைந்தவுடனேயே உண்பதை நிறுத்தி எடையைக் கட்டுக்குள் வைக்கும் இவர்கள், காய்கறிகள், மீன், கடல் உணவுகள் மற்றும் சோயா போன்ற ஊட்டச்சத்துமிக்க உணவுகளை அன்றாடம் உட்கொள்கின்றனர். மேலும், உடற்பயிற்சியைத் தனியாகச் செய்யாமல் அன்றாட நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தங்களுக்குப் பிடித்தமான பணிகள் வழியாக உடலையும் மனதையும் முதுமையிலும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்கின்றனர்.
பெண்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக இருப்பதற்கு அவர்களின் உயிரியல் காரணிகளோடு சேர்த்து, நோய் தடுப்பு சார்ந்த சுகாதார விழிப்புணர்வும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான வலுவான சமூகத் தொடர்புகளுமே காரணம். அரசாங்கத்தின் தரமான பொது மருத்துவக் காப்பீடு மற்றும் நோய் தீவிரமடைவதற்கு முன்பே கண்டறியும் பரிசோதனைகள் போன்றவற்றால் உரிய சிகிச்சை விரைவாகக் கிடைக்கிறது. இவ்வாறு உணவு, உடல் இயக்கம், சமூக உறவு மற்றும் நோய் தடுப்பு மருத்துவம் ஆகியவை ஒன்றிணைந்துதான் ஜப்பானியர்களை முதுமையிலும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ வைக்கின்றன.
