“கொஞ்சம் கால் சறுக்கினாலும் அவ்வளவுதான்..!” விதிஷாவில் தொடரும் மாணவர்களின் ஆபத்தான பள்ளிப் பயணம்..! வைரல் வீடியோவால் எடுத்த நடவடிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கொஞ்சம் கால் சறுக்கினாலும் அவ்வளவுதான்..!” விதிஷாவில் தொடரும் மாணவர்களின் ஆபத்தான பள்ளிப் பயணம்..! வைரல் வீடியோவால் எடுத்த நடவடிக்கை..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கக்ருவா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பெட்வா நதியின் குறுக்கே உள்ள தடுப்பணையின் சிமெண்ட் தூண்கள் மீது ஆபத்தான முறையில் தாவிச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை காலத்தில் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து நீர் வேகமாகப் பாயும் நிலையிலும், தங்களின் படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக மாணவர்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். கக்ருவா கிராமத்து மாணவர்கள் அருகில் உள்ள பாலோ கிராமத்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல அரசு அமைத்த தார்ச்சாலை வழியாக 10 முதல் 12 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், இந்தத் தடுப்பணையைக் கடந்தால் 1.5 கிலோமீட்டர் தூரத்திலேயே பள்ளியை அடைந்துவிட முடியும் என்பதால், 9-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகள் உட்பட 9 சிறுவர்கள் தினமும் 3 முதல் 4 அடி இடைவெளியில் உள்ள வழுக்கும் சிமெண்ட் தூண்களின் மீது குதித்து ஆற்றைக் கடக்கின்றனர்.

பெற்றோர்கள் தினந்தோறும் வயல் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போக இயலவில்லை என்றும், ஆபத்து என்று தெரிந்தும் படிப்பிற்காக அனுப்ப வேண்டியிருப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஆபத்தான வழிக்கு அஞ்சி பள்ளிக்குச் செல்லாத ஒரு மாணவி தேர்வில் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த அவலம் நடந்துள்ள விதிஷா மாவட்டம், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரும் முன்னாள் முதலமைச்சருமான சிவராஜ் சிங் சவுகானின் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மாணவர்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, மாணவர்கள் பாதுகாப்பாகச் சாலை வழியாகப் பள்ளிக்குச் செல்ல ஏதுவாக அவர்களுக்குப் புதிய மிதிவண்டிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் தற்காலிகப் பாலம் அமைப்பதற்கான திட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கக்ருவா கிராமத்திற்கு அருகிலேயே புதிய பள்ளி ஒன்றைத் தொடங்குவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in