LATEST NEWS
“என்னப்பா சொல்றீங்க…?!” டீ குடிச்சுட்டு கப்பையையும் சாப்பிடலாமா… அசத்தும் சாப்ட்வேர் பெண்ணின் மாஸ் கண்டுபிடிப்பு..!!”
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மென்பொருள் பொறியாளரான அனுஷா மற்றும் அவரது கணவர் மனோஜ் ஆகிய இருவரும் இணைந்து, பிளாஸ்டிக் மற்றும் காகிதக் கோப்பைகளுக்கு மாற்றாக சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் ‘உண்ணும் தேநீர்க் கோப்பைகளை’ உருவாக்கியுள்ளனர். வழக்கமான காகிதக் கோப்பைகளில் உள்ள நுண்பிளாஸ்டிக்கள் சூடான பானங்கள் மூலம் உடலுக்குள் சென்று தீங்கு விளைவிப்பதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்த ஸ்டார்ட்-ஆப் முயற்சியை இவர்கள் தொடங்கியுள்ளனர்.
கேழ்வரகு, அரிசி மாவு, சோள மாவு மற்றும் கோதுமை மாவு போன்ற சத்துமிக்க தானியக் கலவைகளைக் கொண்டு, தானியங்கி இயந்திரங்கள் மற்றும் அழுத்தப் பேக்கிங் முறை மூலம் இந்தக் கோப்பைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை தேநீர், காபி அல்லது ஐஸ்கிரீம்களை 20 முதல் 40 நிமிடங்கள் வரை நமத்துப் போகாமல் தாங்கும் திறன் கொண்டவை. மேலும், நுகர்வோரைக் கவரும் வகையில் சாக்லேட், வெண்ணிலா, ஏலக்காய், ஸ்ட்ராபெர்ரி மற்றும் கார சுவைகளிலும் இவை கிடைக்கின்றன.
ஆரம்பகட்டத்தில் பல தோல்விகளையும் சவால்களையும் சந்தித்த போதிலும், இவர்கள் தற்போது இத்துறையில் வெற்றி பெற்றுள்ளனர். பானத்தைக் குடித்த பிறகு இந்த கோப்பையை பிஸ்கெட் போல சாப்பிட்டுவிடலாம்; தவறவிட்டாலும் இவை இயற்கை உரமாகவும் விலங்குகளுக்கு உணவாகவும் மாறும். கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ராகி போன்ற தானியங்களால் செய்யப்படும் இந்த ஆரோக்கியமான கோப்பைகள் தற்போது ஹோட்டல்கள், திருமண விழாக்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
