CRIME
“யார் நீங்க..? மருத்துவ முகாம் தகவல் சொல்ல வந்தேன்…” என நாடகமாடி நைஸா எஸ்கேப் ஆன பெண்… 300 சிசிடிவி கேமராக்களை அலசி அம்பத்தூரில் பீரோவைக் காலி பண்ணிய ‘லேடி கில்லாடியை’தூக்கிய போலீஸ்..!!
சென்னை அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம பெண் ஒருவர் மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாகக் கூறி வீடு வீடாகச் சென்று நோட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஈஸ்வரி என்பவர் மொட்டை மாடிக்குத் துணி காயப்போடச் சென்ற நேரத்தில், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த அப்பெண், பீரோவைத் திறந்து பணத்தைத் திருடியுள்ளார். கீழே வந்த ஈஸ்வரி அப்பெண்ணைப் பிடித்து விசாரித்தபோது, மருத்துவ முகாம் தகவல் சொல்ல வந்ததாகக் கூறிவிட்டு அவர் தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து ஈஸ்வரி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் போலீசார், தனிப்படை அமைத்து அம்பத்தூர், கொரட்டூர், பெரம்பூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டவர் எண்ணூரைச் சேர்ந்த கோகிலா (36) என்பது தெரியவந்தது. திருட்டிற்குப் பின் ஆட்டோ மற்றும் ரயில் மூலம் திருத்தணி சென்ற கோகிலா, அங்குள்ள முருகன் கோவில், வாராகி அம்மன் கோவில், சாய்பாபா கோவில்களில் கொள்ளையடித்த பணத்தில் தலா ரூ.20 ஆயிரம் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து கோவைக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த கோகிலாவைத் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பட்டப்பகலில் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இதுபோன்று மருத்துவ முகாம், கணக்கெடுப்பு எனப் பல்வேறு காரணங்களைக் கூறி வரும் சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
