CRIME
ஹோட்டல் ரூம் மெத்தையில் ரத்தக்கறை… மரணத்தை மருத்துவர் சொன்ன அடுத்த நொடி காதலன் செய்த பகீர் காரியம்.. போலீசாரை உலுக்கிய ஹோட்டல் அறை காட்சிகள்..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம் பெண், தனது காதலனான ஸ்ரீனிவாச ரவி தேஜா என்பவருடன் ஹைதராபாத்திற்கு வந்துள்ளார். இவர்கள் இருவரும் அங்கேயுள்ள மாதப்பூர் சித்திக் நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து ஒன்றாகத் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் நிகிதாவிற்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கூறி, அவரது காதலன் ரவி தேஜாவும் ஓட்டல் ஊழியர்களும் இணைந்து அவரை கொண்டாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு நிகிதாவை தீவிரமாகப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் அவரது மரணத்தை உறுதி செய்த அடுத்த கணமே, ரவி தேஜா அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பியோடியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதப்பூர் போலீசார், உயிரிழந்த நிகிதாவின் உடல், முகம் மற்றும் தலைப் பகுதிகளில் கடுமையான காயங்களும் வீக்கங்களும் இருப்பதை உறுதி செய்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையை தீவிரமாகச் சோதனையிட்டபோது, அங்கிருந்த சுவர்கள் மற்றும் மெத்தைகளில் ரத்தக்கறைகள் படிந்திருப்பது கண்டறியப்பட்டது. காதலனே அவரை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவி தேஜாவை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
