LATEST NEWS
அடப்பாவமே.. சின்ன தகராறுக்கு இப்படியா பழிவாங்குறது… பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து டிராக்டரால் நசுக்கிய நபர்..! நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி வீடியோ..!!
ராஜஸ்தானில் பெட்ரோல் பங்க் ஒன்றில் டிராக்டர் ஓட்டுநர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 20-ஆம் தேதி பிங்குன் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் நடந்துள்ளது. பணத்தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தன்று, பிங்குன் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் குர்ஜார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார். ஊழியர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த போது, அங்கு ஏற்கனவே டிராக்டருடன் நின்றிருந்த சைத்தான் குர்ஜார் என்பவர் திடீரென தனது டிராக்டரை சுரேஷை நோக்கி வேகமாக திருப்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் உடனடியாக ஓடி தப்பித்தார். ஆனால், அந்த டிராக்டர் அவரது மோட்டார் சைக்கிள் மீது ஏறி அதை முழுமையாக நசுக்கியது. தொடர்ந்து சுரேஷ் பெட்ரோல் பங்க் கட்டிடத்திற்குள் ஓடி தஞ்சம் புகவே, டிராக்டர் ஓட்டுநரும் சிறிது தூரம் பின்தொடர்ந்து சென்றுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் நரைனா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்துப் பேசிய காவல் நிலைய அதிகாரி உம்ராவ் சிங், முதற்கட்ட விசாரணையில் இது இருவருக்கும் இடையேயான பணத்தகராறு என்பது தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார். இச்சம்பவத்திற்கு 2-3 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சுரேஷ் சைத்தானைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே சைத்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது குற்றம் சாட்டப்பட்ட சைத்தான் குர்ஜார் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
