CRIME
“ஆபரேஷனுக்கு பதிலா தேதி மேல தேதி..” – 15 வயது சிறுமி பலியானதால் டெல்லி எய்ம்ஸ் அதிரடி முடிவு.. விசாரணைக் குழு அமைத்து இயக்குநர் உத்தரவு..!!
டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமி தன்வி, அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 முதல் சிகிச்சை பெற்று வந்த தன்விக்கு, அறுவை சிகிச்சை செய்யப்படாமல் தொடர்ந்து ‘தேதி மேல் தேதி’ மட்டுமே வழங்கப்பட்டதாக அவரது தந்தை முகேஷ் பரியாணி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதாக மருத்துவமனைக்கு எதிராக வழக்கறிஞர் மூலம் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சிறுமியின் தந்தை கூறுகையில், கடந்த 2014-ம் ஆண்டே அறுவை சிகிச்சைக்காக பணமும், ரத்தமும் செலுத்தப்பட்ட போதிலும் மருத்துவர்கள் தொடர்ந்து அறுவை சிகிச்சையைத் தள்ளி வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் புகார் அளித்தபோது, புகாரை வாபஸ் பெற்றால் மட்டுமே ஆபரேஷன் நடக்கும் என மருத்துவர்கள் மிரட்டியதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் விடுமுறை போன்ற காரணங்களால் சிகிச்சை தாமதமானதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1, 2026 அன்று சிறுமியின் ஆக்ஸிஜன் அளவு 48 சதவீதமாகக் குறைந்ததைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இருப்பினும், சிறுமிக்கு ‘வென்ட்ரிகுலர் செப்டல் டிஃபெக்ட்’ மற்றும் ‘பல்மோனரி அட்ரெசியா’ போன்ற மிகவும் சிக்கலான பிறவி இதய நோய் இருந்ததால், அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கே ஆபத்தாக முடியும் என 2017-லேயே நிபுணர் குழு முடிவு செய்ததாக எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தற்போதைய பரபரப்பான சூழலைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் இந்த மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த உயர்நிலைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
