CRIME
ஜெம் கிரானைட் வீரமணியின் அடுத்த விஸ்வரூபம்… பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கில் வெளிவந்த பகீர் உண்மை.. 12 வருஷத்திற்குப் பிறகு நியாயம் கேட்கும் தாய்.. ஐஸ் ஹவுஸில் பரபரப்பு..!!
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியால், கடந்த 2014-ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவி ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவரது பெண் உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிறப்பு காவல் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அளித்துள்ள புகாரில், கல்வி உதவி என்ற பெயரில் தனது மகளை அழைத்துச் சென்று வீரமணி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், இதனால் மனமுடைந்த தனது மகள் கடந்த 2014-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்தபோதே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அப்போதைய சூழலில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ளதால் தைரியம் அடைந்து மீண்டும் நீதி கேட்டு புகார் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் தாயார் 12 ஆண்டுகளுக்கு முன்பே புகார் அளித்ததாகக் கூறியுள்ள நிலையில், அது தொடர்பான ஆவணங்களையும் காவல் துறையினர் மீட்டெடுக்கும் தீவிர பணியில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, கடந்த காலங்களில் தீக்கிரையான காவல் நிலையக் கோப்புகளுக்கு நடுவே, நீதிமன்ற இணையதளம் மூலம் வழக்கு குறித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்ட காவல் துறையினர் திட்டம் வகுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
