LATEST NEWS
“அது யார் அப்பா வீட்டு காசு..?!” திமுகவினரை நோக்கிப் பாய்ந்த செங்கோட்டையனின் அதிரடி கேள்வி.. சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவாதம்..!!
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவது குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே மீண்டும் ஒருமுறை அனல் பறக்கும் காரசார விவாதம் அரங்கேறியுள்ளது. விவாதத்தைத் தொடங்கி வைத்த திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் கொடுப்பதால் என்ன பயன் எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், தொகுதிக்குச் சென்று மக்கள் பணியாற்றவே கார் வழங்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், “அரசு வழங்கும் காரில் பயணம் செய்யும்போது அதற்குரிய தனி மரியாதை இருக்கும் என்றும், ஆனால் திமுகவினர் கார் பந்தயத்திற்காக 24 கோடி ரூபாய் செலவு செய்தீர்களே, அது யார் அப்பா வீட்டுப் பணம்?” என்றும் காரசாரமாக கேள்வி எழுப்பினார். இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு, “நீங்கள் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் 10 கோடி ரூபாய் நிதியை எதற்கும் பயன்படுத்தாமல் அப்படியே வீணாக முடக்கி வைத்திருந்தீர்கள்; அதைப்போலவே நாங்களும் செயலற்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?” என்று அனல் பறக்கும் வாதத்தை முன்வைத்தார்.
இந்த விவாதத்தின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முடிவின்படி தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் தேவையில்லை என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், அரசு கஜானாவில் பணமில்லை என்று கூறும் திமுகவினர், கடந்த ஆட்சியில் கலைஞருக்குக் கடலில் பேனா சிலை வைக்கக் கோரியபோது மட்டும் நிதி எங்கிருந்து வந்தது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கம் அளித்த திமுக கொறடா எ.வ.வேலு, தமிழ்நாட்டின் பொருளாதாரம் எப்போது சீராகிறதோ அப்போது பேனா சிலையை வைத்துக் கொள்ளலாம் என மு.க.ஸ்டாலின் தள்ளி வைத்ததாகக் கூறி விவாதத்தை முடித்து வைத்தார். இறுதியாகச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், கார் இல்லாத எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அரசு காரைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தார்.
