CRIME
என்ன கொடுமை இது..! நம்ம ஊரு சிம் கார்டை துபாய் வழியா பாகிஸ்தானுக்கு அனுப்பி உளவு வேலையா..? டெல்லியில மாட்டுன ISI நெட்வொர்க்..!!
டெல்லி காவல்துறையின் ஸ்பெஷல் செல் அதிகாரிகள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் உத்தரவின் பேரில் இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்டு வந்த ஒரு உளவு நெட்வொர்க்கைக் கண்டுபிடித்து, டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதியைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதான முகமது சாகில் மற்றும் அவரது 21 வயதான மனைவி சமீரா ஆவர். 2024-ஆம் ஆண்டு சாகில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பாகிஸ்தான் முகவர் ஒருவருடன் தொடர்பில் வந்துள்ளார். பின்னர், அந்த முகவர் மூலமாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பு ஏற்பட்டு, பண ஆசை காட்டப்பட்டு இந்த உளவு வலையமைப்பில் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 8 இந்திய சிம் கார்டுகளை துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பாகிஸ்தான் முகவர்களிடம் இருந்து ரூ.30,000 பணம் கிடைத்துள்ளது. பாகிஸ்தானை அடைந்த அந்த இந்திய எண்களைக் கொண்டு வாட்ஸ்அப் கணக்குகள் தொடங்கப்பட்டு, இந்தியாவில் உள்ள சில வாட்ஸ்அப் குழுக்களில் நுழைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களைப் சேகரிக்க பாகிஸ்தான் முகவர்கள் முயன்றுள்ளனர். சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்புவதில் மனைவி சமீரா மிக முக்கியமான பங்கு வகித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் உள்ள பல்வேறு இராணுவ கண்டோன்மென்ட் பகுதிகளை நோட்டமிடுவதற்கும், உளவு வேலைக்காக புதிய நபர்களை நெட்வொர்க்கில் சேர்ப்பதற்கும் சாகிலுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், ட்ரிப்யூனலில் கோர்ட் மார்ஷல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ள இராணுவ வீரர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்குமாறும் அவனிடம் கூறப்பட்டுள்ளது. இந்தத் தம்பதியிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஃபாரன்சிக் பரிசோதனையில், பாகிஸ்தான் முகவர்களுடன் அவர்கள் நடத்திய சந்தேகத்திற்கிடமான உரையாடல்கள் மற்றும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
