LATEST NEWS
“எங்க தாத்தா கொடுத்த கடனை வட்டியோடு திருப்பி கொடுங்க” பிரிட்டிஷ் அரசுக்கு ரூ.35,000 கடன் கொடுத்த இந்திய நபர்.. 109 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்திடம் திருப்பி கேட்கும் பேரன்கள்..!!
முதலாம் உலகப் போரின்போது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சேத் ஜும்மா லால் ருத்தியா என்பவர், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ரூ.35,000 கடனாக வழங்கினார். 1917-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி போபால் மாநில நிர்வாகத்தை சீரமைக்கவும், போர்ச் செலவுகளுக்காகவும் இந்தக் கடன் பெறப்பட்டது. 109 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது அவரது பேரன்கள் வினய் மற்றும் விவேக் ருத்தியா இந்தத் தொகையை வட்டியுடன் திருப்பித் தருமாறு இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிலதிபரின் வம்சாவளியினர் தங்களது தாத்தா விட்டுச்சென்ற பழைய ஆவணங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களை தங்களது பதிவேடுகளில் இருந்து கண்டெடுத்துள்ளனர். அந்த ஆவணத்தில், சேத் ஜும்மா லால் இந்திய போர் கடனுக்காக ரூ.35,000 செலுத்தி, பிரிட்டிஷ் பேரரசிற்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வரலாற்று ஆவணத்தில் போபாலில் இருந்த பிரிட்டிஷ் அரசியல் முகவரின் கையொப்பமும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆவணங்களின் அடிப்படையில், அவர்களின் சட்ட ஆலோசகர் ஸ்ரீயான்ஷ் ரணிவால் மூலம் இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டது. இதனைப் பரிசீலித்த இங்கிலாந்து அரசு, உரிமை கோரப்படாத இந்தப் பணத்தைப் பெறுவதற்கு உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு பதில் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், அரசுப் பத்திரப் பதிவாளரான ‘கம்ப்யூட்டர்ஷேர் இன்வெஸ்டர் சர்வீசஸ் பிஎல்சி’ என்ற அமைப்பைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச சட்டத்தின்படி ஒரு இறையாண்மை கொண்ட நாடு தனது பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது என்று தொழிலதிபரின் பேரன்கள் வாதாடுகின்றனர். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டதால், அசல் தொகையுடன் வட்டியும் சேர்ந்து இதன் தற்போதைய மதிப்பு பல கோடிகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக ஆதாரங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இங்கிலாந்து அரசிடம் வழங்கி, தங்களது பாரம்பரிய சொத்தை மீட்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
