LATEST NEWS
திக் திக்..! “கண் இமைக்கும் நேரத்தில் கங்கைக்குள் மூழ்கிய 100 ஆண்டு பழமையான துர்கை கோயில்! – நொடிப் பொழுதில் நடந்த கொடூரம்… இது என்ன அறிகுறியோ..? அச்சத்தில் மக்கள்..!!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், கங்கை நதியின் கடுமையான சீற்றத்தினால் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது. பல தலைமுறைகளாக உள்ளூர் மக்களால் மிகுந்த பக்தியுடன் வழிபடப்பட்டு வந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலம், நொடிப் பொழுதில் ஆற்று வெள்ளத்தில் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் கடந்த சில நாட்களாகக் கங்கை நதியில் அதிவேக நீரோட்டம் மற்றும் கடுமையான கரை அரிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, ஆற்றின் கரையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த இந்த நூற்றாண்டுக் கோவிலின் அடிப்பகுதி மண் அரிப்பால் கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனமடைந்தது. இறுதியாகக் கங்கையின் ஆற்றல்மிக்க நீர்ச்சுழலில் சிக்கி, கோவிலின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் அப்படியே சரிந்து ஆற்று வெள்ளத்திற்குள் மூழ்கி மறைந்தது.
தங்கள் முன்னோர்கள் காலம் தொட்டுப் போற்றிப் பாதுகாத்து வந்த பழமையான துர்கை கோவில் தங்கள் கண் முன்னாலேயே அழிந்ததைக் கண்ட உள்ளூர் மக்கள் கடும் சோகத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். இக்கோவில் இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகிப் பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது. இயற்கை சீற்றத்தினால் ஆன்மீக அடையாளம் ஒன்று முற்றிலும் அழிந்து போனது அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
