CRIME
“உங்க பேங்க் அக்கவுண்ட் பயங்கரவாதத்தோட லிங்க் ஆயிருக்கு..!” 74 வயது முதியவரை 7 நாட்கள் வீடியோ காலில் சிறைபிடித்து ரூ .30 லட்சம் சுருட்டிய பலே கும்பல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
டெல்லியில் 74 வயது ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் மற்றும் அவரது மனைவியை டிஜிட்டல் கைது செய்து, பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக மிரட்டி ரூ.30 லட்சம் சுருட்டிய சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த சுனில் சிங்லா என்ற நபர் நீண்ட விசாரணைக்குப் பின் போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி துவாரகா பகுதியில் வசிக்கும் இந்த முதியவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோசடியாளர், தன்னை தேசிய புலனாய்வு அமைப்பான அதிகாரி என்று அறிமுகப்படுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்புச் சம்பவத்திற்கும் முதியவரின் வங்கிக் கணக்கிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, ஒத்துழைக்கத் தவறினால் உடனடியாகக் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தியுள்ளனர். பிள்ளைகள் உட்பட யாரிடமும் பேசக் கூடாது என்று கட்டளையிட்டு, சுமார் 7 நாட்கள் வீடியோ அழைப்பு மூலமாகவே அந்த முதிய தம்பதியினரைத் தங்களது டிஜிட்டல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
விசாரணை என்ற பெயரில் போலியான அரசு முத்திரையிட்ட ஆவணங்களைக் காட்டி நம்ப வைத்த மோசடியாளர்கள், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி, ரிசர்வ் வங்கி அங்கீகரித்த கணக்கு என ஒரு போலி கணக்கு எண்ணைக் கொடுத்துள்ளனர். பயந்துபோன முதியவர் தனது நிலையான வைப்புத் தொகையை அவசரமாக உடைத்து, இரண்டு தவணைகளாக மொத்தம் ரூ.30 லட்சத்தை அந்த மோசடி கணக்கிற்கு மாற்றியுள்ளார். பணம் கைமாறிய பிறகு மோசடியாளர்கள் அழைப்பைத் துண்டித்ததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதியினர் டெல்லி குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய 6 மாத கால தீவிர விசாரணையில், ஹரியானாவைச் சேர்ந்த நிறுவனத்தின் பெயரில் இருந்த அந்த ‘மியூல்’ வங்கிக் கணக்கைக் கண்டறிந்து குற்றவாளியைக் கைது செய்ததோடு, கடத்தப்படவிருந்த ரூ.12 லட்சத்தை அதிரடியாக மீட்டு முதியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
