CRIME
“எம்மாடி என்ன ஒரு ராஜதந்திரம்..?!” உள்ளாடைக்குள் ரகசிய அறை அமைத்து அசுர ஸ்கெட்ச் போட்ட 58 வயது நபர்… தனியறை சோதனையில் சிக்கிய பலே ஆசாமி.. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நடந்த பயங்கர சம்பவம்..!!
சிங்கப்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்குத் தனது உள்ளாடைக்குள் ரூ.53.72 லட்சம் மதிப்புள்ள 43 சவரன் தங்கத்தை ரகசியமாக மறைத்துக் கடத்தி வந்த திருச்சியைச் சேர்ந்த 58 வயது நபர் சுங்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கள்கிழமை அதிகாலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்திறங்கிய பன்னாட்டு விமானப் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளைச் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த அழகப்பன் சங்கரன் (58) என்பவரின் பதற்றமான நடவடிக்கைகள் மற்றும் உடல் அசைவுகள் மீது அதிகாரிகளுக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரைத் தனியறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் நடத்திய தீவிரச் சோதனையில், அவர் தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மிகவும் சாதுரியமாக மறைத்து வைத்திருந்தது அப்பட்டமாக அம்பலமானது. அவரிடமிருந்து ரூ.46.24 லட்சம் மதிப்புள்ள 36.5 பவுன் எடையுள்ள தங்கக் கட்டியும், ரூ.7.48 லட்சம் மதிப்புள்ள 6.5 பவுன் தங்க வளையல்களும் என மொத்தம் 347 கிராம் எடையுள்ள 43 பவுன் தங்கம் சுங்கத்துறையினரால் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அழகப்பன் சங்கரனைக் கைது செய்து, இந்த இமாலயத் தங்கம் சிங்கப்பூரில் யாரிடமிருந்து பெறப்பட்டது மற்றும் திருச்சியில் யாருக்காகக் கடத்தி வரப்பட்டது என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
