CRIME
அந்த பழக்கம் இருக்கு அதனால “இந்த மாப்பிள்ளை வேண்டாம்..” திருமணத்தை நிறுத்தியதால் வெறிச்செயல்… முன்னாள் காதலி, தங்கை மீது ஆசிட் வீசிய போதை ஆசாமி…!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூரில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியதால் ஆத்திரமடைந்த முன்னாள் மாப்பிள்ளை, தனது முன்னாள் வருங்கால மனைவி மற்றும் அவரது சகோதரி மீது ஆசிட் வீசி கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரு சகோதரிகளும் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்ற அந்த இளைஞருக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் செய்ய முன்னரே நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மணமகனுக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பது பின்னரே பெண் வீட்டாருக்கு தெரியவந்ததால், அவர்கள் இந்தத் திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஷ் பாட்டி, கடந்த சனிக்கிழமை இரவு அமிலப் பாட்டிலுடன் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, கதவைத் திறந்த தனது முன்னாள் வருங்கால மனைவி மற்றும் தடுக்க வந்த அவரது சகோதரி மீதும் ஆசிட்டை வீசியுள்ளார்.
பெண்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், அங்கிருந்து தப்பி ஓட முயன்ற குற்றவாளி ஹர்ஷ் பாட்டியை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிம்பாவலி காவல் நிலைய போலீசார், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
