CRIME
“கணவன் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து” கன்னியாகுமரியில் காதல் மனைவி கடத்தப்பட்டு கட்டாயத் திருமணம்..? எஸ்.பி அலுவலகத்தில் கணவர் பரபரப்பு புகார்..!
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு செட்டிவிளை பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட திவ்யதர்ஷினி (20) என்ற இளம்பெண்ணை, அவரது கணவர் ஜெகன் வீட்டில் இல்லாத நேரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடித்து உதைத்து காரில் கடத்திச் சென்றுள்ளது. இது தொடர்பாக ஜெகனின் தாய் விஜயா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் பெற்றோர் எதிர்ப்பை மீறி இந்தத் தம்பதியினர் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் அடியாட்களுடன் வந்து தங்களை மிரட்டி பெண்ணைக் கடத்திச் சென்றதாகவும், தற்போது அந்தப் பெண்ணிற்கு விருப்பமில்லாமல் வேறொரு நபருடன் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஏற்கனவே தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், கடத்தப்பட்ட இளம்பெண்ணை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
