CRIME
அதிர்ச்சி.. பணி முடிந்து வீடு திரும்பிய அரசு செவிலியர்.. சாலையில் காத்திருந்த எமன்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி..!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அரசு மருத்துவமனை செவிலியர் மீது தனியார் பேருந்து மோதிய கோர விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த புளோரன்ஸ் ஜாஸ்பின் (46), தனது பணியை முடித்துவிட்டு வழக்கம் போல் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பன்னவிளை சந்திப்பு அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது பயங்கரமாக மோதியது; இந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த புளோரன்ஸ் ஜாஸ்பின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த செவிலியர் புளோரன்ஸ் ஜாஸ்பினுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்; இவரது கணவர் இலவுவிளைதேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்றி வருகிறார். மக்களின் உயிரைக் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஒருவர், பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும், சக மருத்துவமனை ஊழியர்களையும், அப்பகுதி மக்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
