CRIME
“கோர்ட்லயே உன்னை வெட்டிப் போட்டுருவேன்!” நீதிமன்றம் வந்து திரும்பிய மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… 7 வருட காதலில் இப்படியொரு சோகம்..!!
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே, வரதட்சணை கொடுமை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய மனைவியையும் அவரது குடும்பத்தினரையும் கணவர் கத்தியால் குத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழங்குவிளை பகுதியைச் சேர்ந்த மேரி அபிஷா (25) என்பவரும், கார் ஓட்டுநர் அனிஷ் மார்ட்டின் (30) என்பவரும் 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2022-ல் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான முதலே அனிஷ் கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால், கடந்த 2024-ல் கணவரைப் பிரிந்த அபிஷா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி காலை இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு அபிஷா தனது தாய் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த அனிஷ் மார்ட்டின், குழந்தையைத் தன்னிடம் தருமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென அபிஷாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது தலையில் குத்தி, கழுத்தை அறுக்க முயற்சி செய்துள்ளார்.
இதைத்தடுக்க முயன்ற அபிஷாவின் தாய் மேரி நிர்மலா, சகோதரி மேரி அனுஷா மற்றும் தம்பி அருண் அஜய் ஆகியோரையும் அனிஷ் மார்ட்டின் கத்தியால் குத்தித் தாக்கியுள்ளார். “கோர்ட்லயே உன்னை வெட்டிப் போடுவேன்” என மிரட்டிவிட்டு அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொற்றிக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய அனிஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
