CRIME
“உன் கேரக்டரே சரியில்லை, இங்க எதுக்கு வந்த?!” அம்மா முன்னாடியே தலித் மாணவியைக் கேவலப்படுத்திய தலைமை ஆசிரியை… மனமுடைந்து 16 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு… தமிழகத்தை உலுக்கிய சோக சம்பவம்..!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, 11-ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் படிக்க விரும்பிய நிஷாந்தி என்ற 16 வயது தலித் பள்ளி மாணவி, சாதிய ரீதியாகவும் குணம் குறித்தும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அவமதித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 10-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற நிஷாந்தி, தான் படித்த பள்ளியில் வணிகவியல் பிரிவு இல்லாததால், அருகில் உள்ள மற்றொரு அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சேர்க்கைக்காகத் தனது தாயாருடன் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விமலா தேவி மற்றும் கணினி ஆசிரியர் கணேசன் ஆகியோர், மாணவியின் சாதியைக் குறிப்பிட்டு, அவரது நடத்தையைத் தாயின் முன்னிலையிலேயே மிகக் கேவலமாக விமர்சித்து, பள்ளியில் சேர்க்கை தர மறுத்து அராஜகமாக அவமானப்படுத்தியுள்ளனர்.
இதனால் பெரும் மன உளைச்சலும், வேதனையும் அடைந்த மாணவி நிஷாந்தி, வீட்டிற்கு வந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து தனது பிஞ்சு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளான தலைமை ஆசிரியர் விமலா தேவி மற்றும் ஆசிரியர் கணேசன் ஆகிய இருவர் மீதும் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் எஸ்சி/எஸ்டிவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உசிலம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளனர். ஒரு தலித் மாணவியின் கல்விக்கனவைச் சாதிய வன்மத்தால் சிதைத்து, அவரைத் தற்கொலைக்குத் தள்ளிய இந்த நவீன துரோணாச்சாரியர்களின் கொடூரச் செயல், தற்பொழுது தமிழகம் முழுவதும் மாபெரும் மக்கள் கொந்தளிப்பையும், சாதிய கொடுமைக்கு எதிரான தீவிர விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
