CRIME
பரபரப்பு திருப்பம்..! “ரூ.15 லட்சம் கடனுக்காக பெற்ற தந்தையை கொன்ற மகன்” மருமகள் மீது பழிபோட முயன்ற கோடீஸ்வர தொழிலதிபரின் கொலை ரகசியம் அம்பலம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடீஸ்வர மருந்து வினீத் மினோசா கொலை வழக்கில், அவரது சொந்த மகனே தந்தையைக் கொலை செய்ய ரூ. 6 லட்சம் கூலிப்படை கொடுத்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் ஆரம்பத்தில் மருந்து வணிகரின் மருமகள் மீது சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது வினீத்தின் சொந்த மகன் சுப்ரத் மினோசாவை கான்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொடூரக் கொலை வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழக் காரணமாக இருந்தவர் வினீத் மினோசாவின் முன்னாள் வீட்டு வேலைக்காரரான விஷால் ஆவார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மைகளை ஒப்புக்கொண்ட விஷால், தொழிலதிபர் வினீத்தின் மகன் சுப்ரத் மினோசா தான் தனக்கு ரூ. 6 லட்சம் தருவதாகக் கூறி தந்தையைக் கொலை செய்ய ஏவியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஒருவேளை போலீசில் சிக்கிக் கொண்டால் ஒட்டுமொத்தப் பழியையும் தனது மனைவி ஷாலுவின் மீது போட்டுவிடுமாறு சுப்ரத் தன்னிடம் முன்கூட்டியே கூறியிருந்ததாகவும் விஷால் அம்பலப்படுத்தியுள்ளார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சொத்துக்களைக் கைப்பற்றவும், தனக்கு இருந்த ரூ. 15 லட்சம் கடனை அடைப்பதற்காகவும் சுப்ரத் இந்த விபரீதச் சதியைத் தீட்டியது தெரியவந்துள்ளது. கொலை நடந்த அன்று, தந்தை வினீத்தின் மரணம் இயற்கையானது போலக் காட்டப்பட வேண்டும் என்று சுப்ரத் திட்டமிட்டிருந்த போதிலும், வேலைக்காரன் விஷால் வீட்டிற்குள் நுழைந்தபோது வினீத் திடீரென விழித்துக் கொண்டு சத்தம் போட்டதால், பயந்துபோன விஷால் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுப்ரத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், போலீசார் சிடிஆர் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
