LATEST NEWS
“இப்படியொரு நிலை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது” -மகனின் உடலை வாங்க 16 நாட்கள் போராட்டம்.. கண்ணீரோடு வாங்கிய மதுரை மாணவன் தமிழ்ச்செல்வனின் பெற்றோர்..!
மதுரை மாவட்டம் ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முட்புதர் குட்டை ஒன்றில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாணவனின் மரணத்தை ‘கொலை வழக்காக’ மாற்றக் கோரியும், இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் அவர்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர் அலுவலக முற்றுகை, உண்ணாவிரதம் என கடந்த 16 நாட்களாக நீடித்த இந்த போராட்டத்திற்குப் பிறகு, 17-வது நாளான இன்று மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவல்துறையின் தற்போதைய விசாரணை திருப்தி அளிக்காததால், இந்த வழக்கிற்கு நீதி கேட்டு உறவினர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என்ற நம்பிக்கையிலும், தற்போதைய குடும்பச் சூழல் காரணமாகவுமே தற்காலிகமாக உடலைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்துக் காவல்துறையினரிடம் கடிதம் வழங்கியுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட தமிழ்ச்செல்வனின் உடல், வைகை ஆறு தரைப்பாலம் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர், மாணவனின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உடலை வாங்கிக் கொண்ட போதிலும், இந்தச் சந்தேக மரணத்தைக் கொலை வழக்காக மாற்றி, உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை தங்களது நீதிப் போராட்டம் ஓயாது என்று ‘தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டமைப்பினர்’ செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
