CRIME
கஞ்சா வாங்க ரூ.60 தராததால்… பெற்ற தாயை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டிய மகன்… பிணத்தின் அருகே 2 மணி நேரம் அமர்ந்திருந்த கொடூர சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மகன், கஞ்சா வாங்குவதற்கு வெறும் 60 ரூபாய் தராததால் பெற்ற தாயைக் கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குல்பஹார் காவல் எல்லைக்குட்பட்ட ராவத்புரா குர்த் கிராமத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் மூலா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது இளைய மகன் மோகன் சிங் யாதவ் என்பவர் கஞ்சா மற்றும் போதை ஊசிகளுக்குக் கடுமையாக அடிமையாகி, தினசரி போதையில் மிதந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை கஞ்சா வாங்குவதற்காகத் தன் தாயிடம் 60 ரூபாய் கேட்டுள்ளார். அதற்குத் தாய் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுக்கவே, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன், வீட்டில் இருந்த கூர்மையான கோடாரியை எடுத்துத் தாயின் மீது சரமாரியாக 4 முறை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தத் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொடூரச் செயலைச் செய்த பிறகு, குற்ற உணர்வே இல்லாமல் அந்தப் பாவி மகன் தாயின் ரத்த வெள்ள உடலின் அருகிலேயே சுமார் 2 மணி நேரம் அமைதியாக அமர்ந்திருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த உறவினர்கள் இந்த பயங்கரக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குல்பஹார் போலீசார், மூலா தேவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, பெற்ற தாயைக் கொன்ற கொடூர மகன் மோகனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
