LATEST NEWS
“இன்னும் 20 வருஷம்தான் கெடு”… அடுத்த 30 ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடலுக்குள் மூழ்கும் பேரவலம்… இயற்கை எழில் கொஞ்சும் தீவுக்கு வந்த சோதனை.. உறைந்துபோன உலக நாடுகள்..!!
பசிபிக் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள துவாலு என்ற குட்டித் தீவு நாடு, புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் கொடூரத் தாக்கத்தால் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்தமாக நிலப்பரப்பை இழந்து கடலுக்குள் மூழ்கும் அபாயகரமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. வத்திக்கானுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் வாழும் இரண்டாவது நாடான இது, வெறும் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மட்டுமே கொண்ட ஒன்பது சிறிய தீவுகளின் கூட்டமைப்பாகும்.
துவாலுவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து அதிகபட்சமாக வெறும் 4.6 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைந்துள்ளது. உலக சராசரியை விட இருமடங்கு வேகத்தில், அதாவது ஆண்டுக்குச் சராசரியாக 3.9 மில்லிமீட்டர் என்ற அளவில் இங்கு கடல் நீர்மட்டம் மிரட்டும் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடல் அலைகளின் தொடர் சீற்றத்தால், இந்த நாட்டின் இரண்டு முக்கியத் தீவுகள் ஏற்கனவே கடலுக்குள் மூழ்கும் விளிம்பை எட்டிவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் கவலையுடன் தெரிவித்துள்ளது.
இங்கு கடல் நீர் தொடர்ந்து நிலப்பகுதிகளுக்குள் ஊடுருவுவதாலும், அடிக்கடி ஏற்படும் கடுமையான சூறாவளிகளாலும் நிலத்தடி நீர் முற்றிலும் பாழாகி குடிநீருக்கும், விவசாயத்திற்கும் வழியில்லாத நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு தாக்கிய ‘பாம்’ புயல் ஒட்டுமொத்தப் பயிர்களையும் அழித்து வீடுகளை வெள்ளக்காடாக்கியது. தற்பொழுது கடல் அலைகள் அடிக்கடி நாட்டின் முக்கியச் சாலைகளையும், நாட்டின் ஒரே ஒரு விமான நிலைய ஓடுபாதையையும் மூழ்கடித்து மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை முடக்கி வருகின்றன.
தலைநகர் ஃபனாஃபுட்டியில் உள்ள இந்த ஒற்றை விமான நிலைய ஓடுபாதைதான், மாலை நேரங்களில் அந்த நாட்டுச் சிறுவர்கள் கால்பந்து விளையாடும் மைதானமாகவும் உருமாறுகிறது. அந்த அளவிற்கு இங்கு நிலப்பற்றாக்குறை மிகத் தீவிரமாக உள்ளது. விவசாயம் பொய்த்துவிட்ட சூழலில், மீன்பிடித்தல், வெளிநாட்டு நிதியுதவிகள் மற்றும் தங்களது நாட்டின் இணையதள டொமைனான ‘.tv’ உரிமத்தை விற்பனை செய்வதன் மூலமே இந்த நாடு தப்பிப்பிழைத்து வருகிறது. கண்கவர் இயற்கை எழில் கொஞ்சும் தீவாக இருந்தபோதிலும், புவியியல் ரீதியான ஆபத்துகளால் உலகிலேயே மிகக் குறைந்த சுற்றுலாப் பயணிகள் வரும் நாடாகத் துவாலு உள்ளது. மனிதர்களின் சுற்றுச்சூழல் அலட்சியத்தால், ஒரு முழு நாடே உலக வரைபடத்திலிருந்து நிரந்தரமாக மறையப்போகும் அவலம் தற்பொழுது நிகழ்ந்து வருகிறது.
