CRIME
“ஐயோ யாரவது காப்பாத்துங்க” குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த மனைவி… கையில் அரிவாளோடு காத்திருந்த கணவன்… வெளிநாட்டில் இருந்து வந்ததும் கொடூரம்… நடந்தது என்ன..?
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள அதர் நத்தம் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த கணவன், தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கொடூரச் சம்பவம் திங்கட்கிழமை காலை அரங்கேறியுள்ளது. அதர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் வெற்றிச்செல்வி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இளையராஜா சொந்த ஊரில் வீடு கட்டியபோது, வெற்றிச்செல்வி தனது தாய் வீட்டார் மூலம் ₹5 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இந்தக் கடனைத் திருப்பித் தருவது தொடர்பாக இருவருக்கும் இடையே செல்போன் மூலமும், இளையராஜா 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பிய பிறகும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கோபித்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெற்றிச்செல்வி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். இந்தச் சூழலில், இன்று காலை ஒரு பெரிய அரிவாளுடன் மாமியார் வீட்டிற்குச் சென்ற இளையராஜா, யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் மறைந்து இருந்துள்ளார். வெற்றிச்செல்வி தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த கணமே, மறைந்திருந்த இளையராஜா அவரை நோக்கி அரிவாளால் பாய்ந்து சரமாரியாக வெட்டியுள்ளார். இந்தத் கொடூரத் தாக்குதலைத் தடுக்க முயன்றபோது வெற்றிச்செல்வியின் கைவிரல் ஒன்று துண்டாகித் தரையில் விழுந்ததுடன், தலை மற்றும் உடலின் பல பாகங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
வெற்றிச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, இளையராஜா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த பெண்ணைப் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ராமநத்தம் போலீஸார், தப்பியோடிய கணவன் இளையராஜாவை அதிரடியாகப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சனையால் மாமியார் வீட்டிற்குள்ளேயே புகுந்து மனைவியை வெட்டிய கணவனின் வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
