CRIME
“கல்யாணமாகி 18 நாளே தான் ஆச்சு..!” காவலர் கணவன் செய்த காரியம்.. கல்லூரி 3-வது மாடியில் இருந்து விழுந்த பி.டெக் மாணவி.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் மோதகொண்டூர் மண்டலம் கடேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பல்லவி (20) என்ற பீடெக் மூன்றாம் ஆண்டு மாணவி, திருமணமான 18 நாட்களிலேயே கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லவிக்கும், சைதன்யபுரி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி குடும்பத்தினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. காட்கேசர் காவல் எல்லைக்குட்பட்ட கொம்முரி பிரதாப் ரெட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்த பல்லவி, கடந்த செப்டம்பர் 18 அன்று இந்தக் கொடூர முடிவை எடுத்துள்ளார்.
திருமணமான சில நாட்களிலேயே, பல்லவியின் கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர் வரதட்சணை கொடுமைகளைத் தாங்க முடியாமல் மனமுடைந்த பல்லவி, தான் படித்து வந்த கல்லூரி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். பலத்த காயமடைந்த அவர் உடனடியாக ஜீடிமெட்லாவில் உள்ள நீலிமா மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக மேடிபள்ளியில் உள்ள ஸ்ரீகரா மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பல்லவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பல்லவியின் தாய் சந்தியா அளித்த புகாரின் பேரில் காட்கேசர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
