CRIME
“அழகாக இருந்தால் கொலை செய்யலாம்..?!” 24 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இளைஞனுக்காகக் குதித்த 29,000 பெண்கள்.. பரபரப்பு பின்னணி..!!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் தம்பா நகரில், 2018-ம் ஆண்டில் 18 வயது இளைஞரான கேமரூன் ஹெரின் தனது ஃபோர்டு மஸ்டாங் காரில் அதிவேகமாகச் சட்டவிரோதச் சாலைப் பந்தயத்தில் ஈடுபட்டபோது, சாலையைக் கடக்க முயன்ற தாயும் மகளும் அவர் மோதிய வேகத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த விபத்தில் 24 வயதான ஜெசிகா ரைசிங்கர் மற்றும் அவரது 21 மாதக் குழந்தையான லில்லியா ஆகிய இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். நீதிமன்ற விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட கேமரூன் ஹெரினுக்கு, நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இருப்பினும், இந்த விபத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் அரங்கேறிய நிகழ்வுகள் விபத்தை விடவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தன. நீதிமன்ற விசாரணையின் போது எடுக்கப்பட்ட கேமரூன் ஹெரினின் புகைப்படங்கள் டிக் டாக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வைரலானதை அடுத்து, அவரது சிறை தண்டனையைக் குறைக்கக் கோரி சுமார் 29,000 பேர் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டனர். எந்தவொரு புதிய ஆதாரத்தின் அடிப்படையிலோ அல்லது சட்ட நுணுக்கங்களின் அடிப்படையிலோ இந்த ஆதரவு அவருக்குத் தரப்படவில்லை; மாறாக, அவர் பார்க்க ‘மிகவும் அழகாக இருக்கிறார்’ என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டுமே இத்தனை பேர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது உலக அளவில் பெரும் விவாதத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
