LATEST NEWS
“ஆசிரியரா இல்லை அரக்கனா..?!” இரக்கமில்லாமல் மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியை.. வலிதாங்காமல் கதறி துடிக்கும் மாணவி.. வைரல் வீடியோவால் கொந்தளித்த நெட்டிசன்கள்..!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மினாப்பூர் கிளையில் உள்ள டெஜாவூ தனியார் பள்ளியில், தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி மாணவி ஒருவரை ஆசிரியை கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையேயும் நெட்டிசன்களிடமும் கடுமையான கண்டனங்களையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. ஆசிரியர்கள் என்பவர்கள் பள்ளிகளில் குழந்தைகளைத் தங்களின் நண்பர்களைப் போல அன்போடு நடத்த வேண்டுமே தவிர, தங்களின் தனிப்பட்ட மற்றும் வீட்டில் உள்ள விரக்திகளை அப்பாவி மாணவர்கள் மீது காட்டி வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதங்கங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியச் சட்டவிதிகளின்படி, பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான உடல் ரீதியான மற்றும் மன ரீதியான தண்டனைகள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடைச் சட்டம் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் சமமாகப் பொருந்தும். கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 17-ன் படி, எந்தவொரு குழந்தையையும் உடல் ரீதியாகத் தாக்குவதோ அல்லது மன ரீதியாகத் துன்புறுத்துவதோ கடுமையான குற்றமாகும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவும் சட்டத்தில் இடமுண்டு.
