CINEMA
பரபரப்பு..! அதுக்குத்தான் காசு கொடுத்தீங்க… எங்களை விலைக்கு வாங்கல.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென சட்டையை கழற்றிய சல்மான் கான்..!!
திரைப்பிரபலங்களின் உடல் எடை மற்றும் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் அவதூறான விமர்சனங்களுக்கு, பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக்பாஸ் மேடையில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை கத்ரினா கைஃபின் உடல் எடை குறித்து இணையத்தில் பரவிய விமர்சனங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சல்மான் கான் இந்த விவகாரம் குறித்து தனது ஆவேசமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“ஒரு பெண் உடல் எடை கூடினாலோ அல்லது கர்ப்ப காலத்திற்குப் பின் தோற்றம் மாறினாலோ சமூக வலைதளங்களில் மிகவும் கீழ்த்தரமாகக் கிண்டல் செய்கிறார்கள்” என்று சல்மான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு தற்போது 60 வயது ஆகிவிட்டதால், தனது இளமைக் காலத் தோற்றத்தோடு எப்போதுமே இருக்க முடியாது என்று கூறிய அவர், விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் திடீரெனத் தனது சட்டை, ஜாக்கெட் உள்ளிட்டவற்றை கழற்றி மேடையில் தனது உடலைக் காண்பித்தார். மேலும், “நீங்கள் தியேட்டரில் திரைப்படத்தைப் பார்ப்பதற்குத்தான் விலை கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள்; எங்களை விலைக்கு வாங்கவில்லை” என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
பொதுவெளிகளுக்கு வரும் பெண் திரைப்பிரபலங்களின் அனுமதியின்றி, அவர்களின் உடல் பாகங்களை மட்டுமே குறிவைத்து புகைப்படம் எடுப்பவர்களையும் சல்மான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பெண்களின் இடுப்பு, தொடை மற்றும் முதுகுப் பகுதிகளை வேண்டுமென்றே கேமராக்களில் படம் பிடித்து, அதைச் சமூக வலைதளங்களில் பொழுதுபோக்குச் செய்திகளாகப் பரப்புபவர்களின் செயலை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
