LATEST NEWS
தூயசக்தி என நடிக்கிற உங்ககிட்ட ஏன் இந்தக் கள்ளத்தனம்..? தவெக அரசை வெளுத்துவங்கிய சுப்பராயன் MP…!!!
பாஜக – அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலகச் செய்து, அவர்களைத் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்ததன் அரசியல் உள்நோக்கம் என்னவென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. கே.சுப்பராயன் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலக வைத்து, அவர்களையே மீண்டும் இடைத்தேர்தல் வேட்பாளர்களாக அறிவித்த தவெகவின் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வெளிப்படையாகத் தங்களைத் “தூய சக்தி” என்று காட்டிக்கொண்டு நடிக்கும் தவெக தலைமையிடம், ஏன் இந்த கள்ளத்தனமான அரசியல் என்று கே.சுப்பராயன் காட்டமாகச் சாடியுள்ளார். மக்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை விட, பிற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை ஈர்த்துத் தங்களது பலத்தை நிலைநிறுத்த முயல்வது தார்மீக அரசியல் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழலும் முறைகேடும் எங்கு உறுதிப்பட்டாலும், அதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் எப்போதும் கடுமையாக எதிர்ப்பார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார். தவெகவின் இத்தகைய கட்சித் தாவல் மற்றும் இடைத்தேர்தல் உத்திகள் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும், மக்கள் நலனை முன்னிறுத்தாமல் அதிகாரத்தை நோக்கியே தவெக செயல்படுகிறது என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
