CRIME
யாரு சாமி நீ… நகை, பணம் சிக்காததால் ஆத்திரம்… வீட்டை அடித்து நொறுக்கிட்டு சுவரில் ‘SORRY’ எழுதி வச்சிட்டு எஸ்கேப் ஆன திருடன்..! ஐ.டி ஊழியர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்..!!
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு, கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
சில நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியபோது, முன்பக்கக் கதவைத் திறந்து உள்ளே சென்ற அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. உடனடியாகப் படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன. மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மெஷின் மற்றும் ஃபிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் ‘SORRY’ என்று எழுதி வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
