CRIME
“அடக் கொடுமையே.. பிரசாதம் தான் காரணமா..?!” மதுபோதையில் வெறியாட்டம் ஆடிய மாமனார்.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த மருமகள்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அம்மாபேட்டை புத்தூர் மணக்கொல்லை கிராமத்தில், குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகளை மாமனாரே கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வரும் சிவசாமி (65) என்ற விவசாயியின் மூத்த மகன் ராஜா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி வனவள்ளியை சிவசாமியின் இளைய மகன் ராமுவுக்கு மறுமணம் செய்து வைத்துள்ளனர். ராமு திருப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில், வனவள்ளி தனது மாமனார், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வனவள்ளியின் மாமியார் மலர்கொடி, கிராமக் கோவில் பிரசாதத்தை வாங்கி வந்து தனது கணவர் சிவசாமிக்காக வைத்துள்ளார். அப்போது, வனவள்ளி வளர்த்து வந்த நாய் அந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டதால் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாமனார் சிவசாமி, மதுபோதையில் வனவள்ளியின் தலையில் கடப்பாரையால் பலமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வனவள்ளியின் மூத்த மகன் தேவராஜ் அளித்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளி சிவசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
