CRIME
இது என்ன கொடுமை.. வீட்டின் முன் அமர்ந்திருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றிய கொடூரன்.. 6 ஆண்டுகால கள்ளக்காதல் முறிவால் நேர்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
சென்னை வண்ணாரப்பேட்டையில் 6 ஆண்டுகாலக் கள்ளக்காதலை முறித்துக் கொண்டு வேறு ஒருவருடன் பழகிய ஆத்திரத்தில், திருமணமான பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரக் கள்ளக்காதலனைப் போலீசார் கைது செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகனா (34) என்ற பெண்ணுக்கும், திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த பெயிண்டரான பாபுலால் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளாகத் திருமணத்திற்கு மீறிய பழக்கம் இருந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாபுலாலை விட்டு விலகிய மோகனா, வேறொரு நபருடன் பழகத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே, மோகனாவின் கணவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பாபுலால் அவரிடம் பேச முயன்றுள்ளார். ஆனால் மோகனா பேச மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பாபுலால், மதுபோதையில் பெட்ரோல் பங்கிற்குச் சென்று ஒரு லிட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். பின்னர், மோகனா தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்த போது, அவரது பின்புறமாகச் சென்று அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த மோகனாவை மீட்ட அப்பகுதி மக்கள், அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, நந்தியம்பாக்கத்தில் பதுங்கியிருந்த பாபுலாலை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், கைதான பாபுலால் மீது ஏற்கனவே ஒரு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
