LATEST NEWS
ரஷியாவை அலறவிட்ட உக்ரைன்..! 1000 கி.மீ தூரம் பாய்ந்த டிரோன் தாக்குதல்… 13 பேர் கொடூர பலி..! கடும் அதிர்ச்சியில் மாஸ்கோ..!!
மத்திய ரஷியாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்தத் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் டாடர்ஸ்டான் பகுதி எண்ணெய் வளங்கள் நிறைந்த மிகப்பெரிய பிராந்தியமாகும். இங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. உக்ரைன் ராணுவம் ‘டெனேகோ’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ரஷிய ராணுவத்திற்கான எரிபொருள் விநியோகத்தைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் குழந்தைகளும், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையே உக்ரைன் மீதும் ரஷியா பதிலடித் தாக்குதல் நடத்தியுள்ளது. கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், உக்ரைனின் 456 டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், ரஷியா 126 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
