LATEST NEWS
“நாட்டிற்காக 4 தங்க பதக்கம்” ஆனால் வயிற்றுப் பிழைப்புக்குக் காய்கறி விற்பனை… இந்திய த்ரோபால் சாம்பியன் அமர்தீப் குமாரின் பரிதாப நிலை… வைரலாகும் வீடியோ இதோ..!!
இந்தியாவுக்காக சர்வதேச த்ரோபால் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமர்தீப் குமார், தற்போதைய சூழலில் தனது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளக் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். மலேசியா, நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியக் கொடியைப் பெருமையுடன் உயரப் பறக்கவிட்ட இந்த 29 வயது சாம்பியன் வீரர், இன்று ராஞ்சியின் அர்கோரா சவுக் தெருக்களில் காய்கறி விற்பனை செய்தும், வாடகை கார் ஓட்டியும் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பலரிடம் வாங்கிய கடனை அடைக்கவும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அவர் இந்த எளிய வேலைகளைச் செய்து வருகிறார். மற்ற மாநிலங்களில் த்ரோபால் சாம்பியன்களுக்கு விளையாட்டுத் துறையின் கீழ் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் அரசிடம் 2020-ம் ஆண்டு முதல் இவர் விடுத்த வேலைவாய்ப்பு மற்றும் நிதியுதவிக் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களுக்கு முறையான அங்கீகாரமும், கண்ணியமான வாழ்வாதாரத்திற்கான ஆதரவும் தகுந்த நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்பதை இவருடைய தற்போதைய நிலைமை உணர்த்துகிறது.
