LATEST NEWS
நேபாள நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள்..! மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..? சென்னை ஐகோர்ட்டில் அரசு விளக்கம்… விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கெடு..!!
கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்ட் 23-ஆம் தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்குச் சென்றனர். ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாகத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும், மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழகத்தில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில் 220 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.
