94 குழந்தைகள் கருகிய சாம்பல் குவியலிலிருந்து…அன்று 5 நிமிடம் தாமதம்… இன்று துணை ஆட்சியர்…நான் ஏன் உயிர் பிழைச்சேன்னு இப்பதான் புரியுது…பதவியேற்கும் முன் கண் கலங்கிய இளம் அதிகாரி ஜெனிஃபர்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

94 குழந்தைகள் கருகிய சாம்பல் குவியலிலிருந்து…அன்று 5 நிமிடம் தாமதம்… இன்று துணை ஆட்சியர்…நான் ஏன் உயிர் பிழைச்சேன்னு இப்பதான் புரியுது…பதவியேற்கும் முன் கண் கலங்கிய இளம் அதிகாரி ஜெனிஃபர்…!

Published

on

தமிழக வரலாற்றிலேயே என்றும் ஆறாத வடுவாக மாறிய கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்து நடந்து 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், 2004 ஜூலை 16ஆம் தேதியின் அந்த கோரச் சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. 94 பச்சிளம் குழந்தைகள் தீக்கிரையான அந்த மரணப் பொறியில் இருந்து, வகுப்பறை வேலை ஒன்றிற்காக 5 நிமிடங்கள் தாமதமாகச் சென்றதால் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 வயதுச் சிறுமிதான் எஸ். எஸ். ஜெனிஃபர். அன்று 4ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுமி, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15ஆவது இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். வறுமையையும் கண்ணீரையும் கடந்து, தற்போது அவர் ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநராக (துணை ஆட்சியர் அந்தஸ்து) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த 22 ஆண்டுகாலப் பயணத்தில் ஜெனிஃபர் சந்தித்த சவால்கள் ஏராளம். விபத்து நடந்த சமயத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களின் கனிவான அணுகுமுறையும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர் செய்த உதவிகளுமே ஜெனிஃபரின் மனதில் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற விதையை விதைத்தன. 2017 முதல் யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதி ஏமாற்றத்தைச் சந்தித்தது, கொரோனா காலத்தில் தந்தைக்கு ஏற்பட்ட பக்கவாதம், ஒட்டுமொத்தக் குடும்பத்தின் கடுமையான நிதி நெருக்கடி எனப் பல தடைகள் வந்தபோதும் அவர் பின்வாங்கவில்லை. வறுமைச் சூழலிலும் வீட்டிலிருந்தபடியே குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்து இன்று தனது வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளார்.

Advertisement

“அன்று என் கண் முன்னால் என் தோழர்கள், தோழிகள் என 94 பேர் கருகிச் சாம்பலாகியபோது, ‘நான் மட்டும் ஏன் உயிர் பிழைத்தேன்?’ என்ற கேள்வி இத்தனை வருடங்களாக என்னை வேட்டையாடியது; அதற்கான விடை எனக்கு இப்போதுதான் கிடைத்திருக்கிறது” என்று கண்கள் கலங்கக் கூறுகிறார் 30 வயதான ஜெனிஃபர். கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் துறையில் தனக்கு வேலை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறும் அவர், இந்த அதிகாரத்தை ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தின் சாம்பல் குவியலிலிருந்து, தமிழகத்தின் உயரிய நிர்வாக நாற்காலி வரை நீண்டுள்ள ஜெனிஃபரின் இந்த நெடிய பயணம், தடைகளைக் கண்டு துவண்டு போகும் அத்தனை இளைஞர்களுக்கும் ஒரு மாபெரும் நம்பிக்கை வெளிச்சம்!

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in