CRIME
“ஏன்டி உனக்கு நான் முக்கியமா? அவன் முக்கியமா.?” செல்போனில் இருந்த அந்த ஒரு மெசேஜ்… 16 வயது சிறுமியை சுட்டுக்கொன்று தோட்டத்தில் புதைத்த லிவ்-இன் பார்ட்னர்… துரோகத்தை உளறிய மாமாவால் சிக்கிய கும்பல்..!
பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா தாலுகாவிற்கு உட்பட்ட கெம்பலநாதா கிராமத்தில், இன்ஸ்டாகிராமில் வேறொரு சிறுவனுடன் பேசியதற்காக 16 வயது சிறுமி அவரது 16 வயது லிவ்-இன் பார்ட்னரால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜூலை 10-ம் தேதி நடந்த இந்த கொலையை மறைக்க, அந்த சிறுவன் தனது அண்ணன் மற்றும் மாமாவுடன் சேர்ந்து சிறுமியின் உடலை தங்களது விவசாய நிலத்தில் புதைத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த காணாமல் போன புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, கொலை நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் பழகிய இந்த இளம் ஜோடி, கடந்த ஒரு மாதமாக சிறுவனின் பெற்றோர் வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று சிறுமி வேறொருவருடன் குறுஞ்செய்தி அனுப்பியதை பார்த்த சிறுவன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்களுக்குத் தெரியாமல் வீட்டில் வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த தாத்தாவின் பழைய நாட்டுத் துப்பாக்கியால் சிறுமியின் முகத்தில் சுட்டுள்ளார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, சிறுவனின் அண்ணன் புட்டமாதா (19) மற்றும் மாமா ஹரிஷ் (40) ஆகியோர் உடலை நிலத்தில் புதைக்க உதவியுள்ளனர்.
சிறுமியின் மாமா இந்த கொலை குறித்து தனது நண்பர் ஒருவரிடம் கூறியதால் கிராமத்தில் வதந்தி பரவி, அது சிறுமியின் பெற்றோருக்கு எட்டியுள்ளது. மகள் தங்களை தொடர்பு கொள்ளாததால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுவனின் குடும்பத்தினரை விசாரித்தபோது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சிறுமியின் பெற்றோர் தங்களது மகள் எங்கு தங்கியிருக்கிறார் என்பதைச் சரியாகக் கண்காணிக்காததும் இந்த அசம்பாவிதத்திற்கு ஒரு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கொடிஹள்ளி போலீசார் கொலை மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
