CRIME
“என் பிள்ளையைத் திருப்பிக் கொடுங்க..” 4 மாதப் பிஞ்சு குழந்தையைக் கையில் ஏந்தி கதறும் தாய்.. நெஞ்சை நொறுக்கும் சம்பவம்..!!!
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்ட மையத்தில், சாதாரண சளித் தொந்தரவிற்காகப் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 மாத பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏண்ட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமு மற்றும் பிரீத்தி தம்பதியினர், தங்களது 4 மாத குழந்தைக்குச் சளி பாதிப்பு இருந்ததால், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் மகேந்தர் ரெட்டி, சில சிரப்கள் மற்றும் மருந்துகளைப் பரிந்துரைத்துள்ளார்; ஆனால், அந்த மருந்துகளைக் கொடுத்த சில நிமிடங்களிலேயே குழந்தையின் உடல்நிலை அசுரத்தனமாக மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்ததாகப் பெற்றோர்கள் அழுதுகொண்டே குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்களது குழந்தையின் திடீர் மரணத்தால் அடியோடு உடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு முன்பாகக் குழந்தையைக் கைகளில் ஏந்தி மாபெரும் போராட்டத்தில் குதித்தனர்; “சாதாரண சளிக்குத்தானே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு வந்தேன்… என் பிள்ளையை என்கிட்ட திருப்பிக் கொடுங்க” என்று அந்தத் தாய் கண்ணீர் மல்கக் கதறியக் காட்சி பார்ப்போரின் நெஞ்சை நொறுக்குவதாக இருந்தது. மறுபுறம், தன் மீதான குற்றச்சாட்டுகளைக் காரசாரமாக மறுத்துள்ள மருத்துவர் மகேந்தர் ரெட்டி, தான் குழந்தைக்கு எந்தவொரு நேரடி அவசரச் சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும், சில பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்துச் சீட்டை மட்டுமே எழுதிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் வீட்டிற்குச் சென்ற பிறகு மருந்துகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் விளக்கம் அளித்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
