CRIME
“பணத்தை தா.. இல்லை குழந்தையை குடு..” ஆத்திரத்தில் துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய கொடூரம்..! கறிக்கடையில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிமேடு பகுதியைச் சேர்ந்த கல்யாணி என்பவருக்கும், கவுஸ் முகைதீன் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கவுஸ் முகைதீன், கல்யாணியுடனான உறவைத் துண்டித்துவிட்ட நிலையில், அந்த ஆண் குழந்தையை ஆண் வாரிசு இல்லாத தனது உறவினரான பவானிப்புரத்தைச் சேர்ந்த கறிக்கடைக்காரர் ஷபியிடம் தத்தெடுக்கக் கொடுத்தார். குழந்தையைப் பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வந்த கல்யாணிக்கும், ஷபிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கல்யாணி, ஷபியிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவரிடம் பணம் இல்லாதபோது ரூ.20 ஆயிரம் பணம் உடனே வேண்டும் என்றும், தரவில்லை என்றால் தனது ஆண் குழந்தையைத் திருப்பிக் தருமாறும் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷபி, 10 ஆண்டுகளாக வளர்த்து வந்த குழந்தையைக் கொடுக்க மறுத்து கல்யாணியைக் கொலை செய்யத் திட்டமிட்டார். பணம் தருவதாகக் கூறி கல்யாணியை கறிக்கடைக்கு வரவழைத்த ஷபி, கடையில் பணிபுரியும் குரவையாவுடன் இணைந்து அவரை அரிவாளால் வெட்டிக்கொன்று, உடலை 10 துண்டுகளாக வெட்டி அருகிலுள்ள கால்வாயில் வீசியுள்ளார்.
கால்வாயில் உடல் பாகங்கள் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் இப்ராகிம்பட்டினம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளில் ஆதாரம் எதுவும் கிடைக்காத நிலையில், சடலத்தில் இருந்த ஆடைகள் மற்றும் கையில் இருந்த டாட்டூவின் புகைப்படங்களை போலீசார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இதைப் பார்த்த கல்யாணியின் சகோதரர் அது தனது சகோதரிதான் என போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். இதன் மூலம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கல்யாணி குழந்தையையும் பணத்தையும் கேட்டு மிரட்டிய ஆத்திரத்தில் ஷபி இந்தக் கொலையைச் செய்தது அம்பலமானது. இதையடுத்து போலீசார் ஷபியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
