CRIME
“பாதுகாப்பற்ற உணர்வு… என் நெஞ்சே பதறிப்போச்சு…” காத்மாண்டுவில் பெண்ணுக்கு நேர்ந்த அநாகரிகம்.. உடற்பயிற்சி என மழுப்பிய நபரின் சிசிடிவி காட்சி வைரல்..!!
நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியான தாமேல் என்ற இடத்தில், வீதியில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் வீடு திரும்பிச் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் அனுமதி இன்றி, அவருடைய தொடையில் அந்த நபர் கை வைத்து அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அப்பெண் அந்த நபரைத் தட்டிக் கேட்டபோதிலும், தான் உடற்பயிற்சி செய்யும் போது தற்செயலாக கை பட்டுவிட்டது என்றும், அப்பெண்தான் தன்னைப் பார்த்தார் என்றும் கூறி அந்த நபர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இருப்பினும், அங்குள்ள ஹோட்டல் ஒன்றின் சிசிடிவி காட்சிகளை அப்பெண் கைப்பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த சிசிடிவி காட்சியில், அப்பெண் அந்த நபரைப் பார்க்காமலேயே கடந்து செல்ல முயல்வதும், அந்த நபர் வேண்டுமென்றே கையை நீட்டி அப்பெண்ணைத் தொடுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அப்பெண், “இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மனவேதனையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DcyWw6OhADo/?utm_source=ig_web_button_share_sheet
கூட்டம் நிறைந்த பொது இடத்தில் பலர் சூழ்ந்திருந்தபோதிலும், அந்நபருக்கு எதிராக உடனடியாகப் பொலிசில் புகார் அளிக்கத் தயங்கியதாக அப்பெண் கூறினார். “கூட்டத்தில் இருக்கும்போது எனக்குப் பாதுகாப்பு இருந்தது, ஆனால் தனியாக இருக்கும்போது அந்த நபர் என்னைப் பழிவாங்க முயற்சித்தால் என்ன செய்வது என்ற பயத்தினாலேயே நான் உடனே பொலிஸை அணுகவில்லை” என அவர் விளக்கமளித்தார். தற்போது இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு நேபாள பொலிஸார் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளப் பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
