LATEST NEWS
“தலைமைச் செயலகத்தில் கைலாசா தூதர்கள்..!” சோசியல் மீடியாவில் புயலைக் கிளப்பிய நித்தியானந்தா..! உண்மையை உடைத்த அரசுத் தரப்பு..!!!
‘கைலாசா’ என்னும் நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாகக் கூறிக்கொள்ளும் நித்தியானந்தா, சமீபத்தில் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்தில் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சூழலில் அக்கட்சியின் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்த அவர், தனது கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் தமிழகத் தலைமைச் செயலகத்திற்குச் சென்று அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
நித்தியானந்தா தனது பதிவில், கைலாசாவின் பிரதிநிதிகள் தமிழக அமைச்சர்களான லோகேஷ், ஸ்ரீநாத் மற்றும் வன்னி அரசு ஆகியோரை நேரில் சந்தித்து, இருதரப்பு ராஜாங்க ரீதியிலான உறவுகள் குறித்துப் பேசியதாகத் தெரிவித்திருந்தார். மேலும், இந்தச் சந்திப்பின் போது ‘United States of Kailasa’ மற்றும் ‘Kailasa’s History’ ஆகிய புத்தகங்கள் அமைச்சர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டதாகக் கூறி, அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தலைமைச் செயலக வட்டாரங்கள் இதற்குத் திட்டவட்டமான மறுப்பு தெரிவித்துள்ளன. தினந்தோறும் பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக அமைச்சர்களைச் சந்திப்பது வழக்கம் என்றும், அதுபோல மனு அளிக்க வந்தவர்களையே நித்தியானந்தா அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா கூறுவது போல எந்தவொரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், அது முற்றிலும் தவறான தகவல் என்றும் அரசுத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
