LATEST NEWS
“Tata Bye Bye காகித நோட்டுகள்.. களமிறங்கும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்.. எப்போது தெரியுமா?.. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அப்டேட்”..!!
இந்திய கரன்சி வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாக, ரூபாய் நோட்டுகள் கிழிவதற்கும் சேதமடைவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்திய ரிசர்வ் வங்கி பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பிரத்யேக பிளாஸ்டிக் தாள்களைத் தயாரித்து வழங்குவதற்காக, ஆர்பிஐ-இன் நாணய உற்பத்தி பிரிவு சர்வதேச அளவிலான நிறுவனங்களை டெண்டர் மூலம் வரவேற்றுள்ளது. மக்கள் அன்றாடம் அதிகமாகப் பயன்படுத்தும் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளில் இந்த மாற்றத்தை முதன்முறையாகச் செய்து, அடுத்த ஆண்டு முதல் சோதனை முறையில் புழக்கத்தில் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தேசப் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்பிஐ, இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்குச் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் எந்தவொரு வர்த்தக அல்லது ஊழியர் தொடர்பும் இருக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
தற்போதுள்ள காகித நோட்டுகளை விட இந்த பாலிமர் நோட்டுகள் 4 முதல் 5 மடங்கு அதிக காலம் உழைக்கக்கூடியவை; இவை தண்ணீர், எண்ணெய் போன்றவற்றால் பாதிக்கப்படாது மற்றும் கிருமிகளை உறிஞ்சாது. அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த நோட்டுகள் மூலம் கள்ள நோட்டுகளை முற்றிலும் தடுக்க முடிவதுடன், ஆண்டுதோறும் புதிய நோட்டுகளை அச்சடிப்பதற்கான கோடிக்கணக்கான ரூபாய் செலவும் அரசுக்கு மிச்சமாகும். இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமானாலும் பழைய காகித நோட்டுகள் உடனடியாகச் செல்லாததாகிவிடாது, இரண்டுமே புழக்கத்தில் இருக்கும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இம்முறையைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு முழுவதும் பிளாஸ்டிக் நோட்டுகள் முழுமையாகக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
