LATEST NEWS
கெடுபிடி காட்டும் கீர்த்தனா தரப்பு…! “என் பேரு ஏன் செகண்டா இருக்கு…?” பேனரைப் பார்த்து அப்செட் ஆன அமைச்சர் ஜெகதீஸ்வரி… ஷாக்கான கலெக்டர்…. விருதுநகரில் பரபரப்பு…!!
விருதுநகர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறை சார்பாகச் சிலம்பாட்ட வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கும் அரசு விழா ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பேனரில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதல் வரிசையிலும், மாவட்டப் பொறுப்பு அமைச்சரான ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவது இடத்திலும் அச்சிடப்பட்டிருந்தது.
பொதுவாக ஒரு மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருக்கே முதலிடம் தரப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளதால், தனது பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டதைக் கண்டு மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவர், விழா மேடையிலேயே மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவை நேரில் அழைத்து, எதன் அடிப்படையில் இந்த முன்னுரிமை வழங்கப்பட்டது என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அமைச்சரின் இந்தத் திடீர் கேள்விகளால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அங்கு நின்றிருந்த அரசு அதிகாரிகள் நிலைதடுமாறிப் போயினர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அமைச்சர் கீர்த்தனா தற்போது கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், தனது சொந்த ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் தனக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், உள்ளூர் கட்சி நிர்வாகிகளுடன் ஏற்கனவே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், அரசு விழாவின் அழைப்புப் பேனரிலும் இரு பெண் அமைச்சர்களின் பெயர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த முன்னுரிமைப் போட்டி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு விழுந்த டோஸ் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
