LATEST NEWS
“ஜெயலலிதா இடத்திற்கு நான் தான்…” திமுக, காங்கிரஸை தொடர்ந்து பாஜகவுக்கும் ‘செக்’…! தமிழக அரசியலை அதிரவைத்த குஷ்புவின் ‘பகீர்’ ஸ்டேட்மென்ட்..!!
திரையுலகில் வெற்றி நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்பூ, அரசியல் களத்திலும் தனது தீவிரமான பங்களிப்பை வழங்கி வருகிறார். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த இவர், ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை அளித்துள்ளார். குறிப்பாக, பிரபுவுடன் இவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. திரையுலகில் அடைந்த புகழைத் தொடர்ந்து, பொது வாழ்வின் மீது கொண்ட ஆர்வத்தால் அவர் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட குஷ்பூ, கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸில் இருந்த காலத்தில் பாஜகவின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வந்த அவர், யாருமே எதிர்பாராத விதமாக திடீரென பாஜகவிலேயே இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்தத் தொடர் கட்சி மாற்றங்களும், முந்தைய விமர்சனங்களுக்கு மாறான செயல்பாடுகளும் பொதுமக்களிடையே அவருக்கு இருந்த அரசியல் பிம்பத்தைப் பெருமளவில் பாதித்தன.
பாஜகவில் இணைந்த பிறகும் அவருக்கு எதிர்பார்க்கப்பட்ட முக்கியப் பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்தன. இதுகுறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர், பாஜக தன்னை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற தனது மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், 15 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தான் பெரிய பதவிகளை எதிர்பார்க்கவில்லை என்றாலும், சட்டமன்ற உறுப்பினராவதே தனது கனவு என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் ஜெயலலிதா அமர்ந்த முதலமைச்சர் நாற்காலியில் கூட தான் அமரக்கூடும் என்றும், அரசியலில் நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
