LATEST NEWS
“திறமைக்குக் காகிதம் தேவையில்லை!” டாக்ஸி டிரைவர் To கம்பெனி ஹெட்..!சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு நிறுவனரின் ஊக்கமளிக்கும் கதை..!!
பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை பெற உயர்கல்விச் சான்றிதழ், கார்ப்பரேட் அனுபவம் மற்றும் வலுவான பயோடேட்டா ஆகியவை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘அடான்மோ’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரவந்த் கஜுலா, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரபுகளை உடைத்து ஒரு டாக்ஸி டிரைவரை தனது நிறுவனத்தின் முதல் ஊழியராக நியமித்தார். கார்ப்பரேட் அனுபவமோ, ஆங்கில அறிவோ அல்லது கவர்ச்சிகரமான பயோடேட்டாவோ இல்லாத அந்த நபர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அந்நிறுவனத்தின் ‘இந்திய அளவிலான கொள்முதல் துறைத் தலைவராக’ உயர்ந்து வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான கதையை ஸ்ரவந்த் கஜுலா தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நிறுவனம் தொடக்கக் கட்டத்தில் இருந்தபோது, வெறும் பட்டத்தையோ அனுபவத்தையோ மட்டும் பார்க்காமல் அந்த நபரின் கற்றுக்கொள்ளும் ஆர்வம், நேர்மை மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறமையைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதோடு, அவரை வெறுமனே வேலைக்கு அமர்த்துவதோடு நிறுத்தாமல், அவரது ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்க்க வகுப்புகளுக்கு அனுப்பி, படிப்படியாகப் பெரிய பொறுப்புகளையும் வழங்கி நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் அவரைத் தயார்படுத்தினார். இதன் விளைவாக, அன்று டாக்ஸி ஓட்டிய அந்த ஊழியர், இன்று நிறுவனம் முழுவதற்கும் கொள்முதல் பணிகளைக் கவனிக்கும் மிக நம்பகமான தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
இச்சம்பவத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் நிறுவன கலாச்சாரம் குறித்து ஒரு முக்கிய கருத்தையும் கஜுலா பகிர்ந்துள்ளார். பல நிறுவனங்கள் தங்களை “மனிதர்களுக்கு முன்னுரிமை அளிப்பவை” என்று கூறிக் கொண்டாலும், மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட நபர்களுக்கு வாய்ப்பளிக்கும் போதே உண்மையான மாற்றம் நிகழ்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒருவரின் திறமையை வெறும் காகிதத்திலிருக்கும் பயோடேட்டாவை வைத்து மட்டுமே மதிப்பிட முடியாது என்றும், சரியான பயிற்சி, வாய்ப்பு மற்றும் நம்பிக்கை அளிக்கப்பட்டால் எவராலும் தங்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி சாதனைகளைப் படைக்க முடியும் என்றும் அவர் உணர்த்தியுள்ளார்.
